அரசுத்துறைகளில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்


அரசுத்துறைகளில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 1 March 2020 11:00 PM GMT (Updated: 1 March 2020 7:37 PM GMT)

அரசுத்துறைகளில் உள்ள 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட முன்னணி ஊழியர் சந்திப்பு கூட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசு, பொதுச் செயலாளர் செல்வம், பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனநாயக வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் தற்காலிக பணி நீக்கம், பணியிட மாறுதல், பதவி உயர்வு மறுப்பு உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும்.

காலிப்பணியிடங்களை

அரசு துறைகளில் அவுட் சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் 3½ லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரி அனந்தன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.

Next Story