இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 1 March 2020 10:45 PM GMT (Updated: 1 March 2020 8:36 PM GMT)

இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சமயபுரம்,

சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலையில் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகமும், உற்சவ அம்பாள் புறப்பாடும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்மம், யானை, ரி‌‌ஷபம், அன்னம் ஆகிய வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. காலை 9.40 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதைத்தொடர்ந்து 9.50 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டத்தில் இனாம் சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி.துறையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோடும் வீதிகளின் வழியாக வலம் வந்த தேர், காலை 11.05 மணிக்கு நிலையை அடைந்தது.

இதில் மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. பரமேஸ்வரி முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் தலைமையில் கோவில் குருக்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இனாம் சமயபுரம் ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது. மேலும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கப்பட்டது.

Next Story