வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3½ லட்சம் மோசடி - நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேர் கைது


வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3½ லட்சம் மோசடி - நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 March 2020 10:15 PM GMT (Updated: 1 March 2020 10:05 PM GMT)

சின்னமனூரில் உள்ள வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.3 லட்சத்து 62 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னமனூர்,

தேனிமாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 34). இவர் சின்னமனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் சீப்பாலக்கோட்டையை சேர்ந்த ராஜா (34). இவர் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கியில் 26 பவுன் நகைகளை ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார்.

இந்த நிலையில் வங்கியில் கடந்த 27-ந்தேதி நகைகடன்கள் குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ராஜா பெயரில் வைக்கப்பட்ட நகைகள் மீது அதிகாரிகள் சந்தேகம் அடைந்து சோதனை செய்தனர் அப்போது அவை போலி(கவரிங்) நகைகள் என தெரிய வந்தது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளரை அழைத்து அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

இதுகுறித்து வங்கி மேலாளர் சங்கீதா சின்னமனூர் போலீஸ்நிலையத்தில் நகைமதிப்பீட்டாளர் மணிமாறன், போலி நகைகளை அடகு வைத்த ராஜா ஆகியோர் மீது புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணே‌‌ஷ் அவர்கள் 2 பேரையும் அழைத்து விசாரணை செய்தார். இதில் போலி நகைகளை அடகுவைக்க நகைமதிப்பீட்டாளர் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாறன், ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

Next Story