வம்பாகீரப்பாளையம் கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது தாக்குதல் 3 பேர் கைது


வம்பாகீரப்பாளையம் கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது தாக்குதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 March 2020 11:36 PM GMT (Updated: 1 March 2020 11:36 PM GMT)

வம்பாகீரப்பாளையம் கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் கடந்த 28-ந் தேதி மயான கொள்ளை திருவிழா நடந்தது. விழாவில் காளிவேடம் அணிந்து சென்ற ஒருவர், பக்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய போலீஸ்காரர் தெய்வசிகாமணி (வயது 44) இதனை தட்டிக்கேட்டார். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவரிடம், எங்கள் ஊர் திருவிழாவில் எப்படி தலையிடலாம் என்று கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர்கள், தெய்வசிகாமணியை உருட்டு கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இது குறித்து அவர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் விசாரணை நடத்தி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (37), மணிகண்டன் (26), மணிவண்ணன் (40) உள்பட 11 பேர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அத்துமீறி தாக்குதல், மிரட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராமச்சந்திரன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story