திருபுவனை ஏரிக்கரையில் கள் விற்பனை அமோகம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்


திருபுவனை ஏரிக்கரையில் கள் விற்பனை அமோகம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 1 March 2020 11:43 PM GMT (Updated: 1 March 2020 11:43 PM GMT)

திருபுவனை ஏரிக்கரையில் கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை வாங்க வரும் மது பிரியர்களின் வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

திருபுவனை,

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை ஏரிக்கரையில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. இந்த பனை மரங்கள் அரசுக்கு சொந்தமானதால் கலால் துறை மூலம் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது.

அதனை கள்ளுக்கடை உரிமையாளர்கள் ஏலம் எடுத்து பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி தங்களது கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

விபத்து அபாயம்

தற்போது கள் சீசன் என்பதால் தினந்தோறும் அதிகாலை 5 மணிக்கு பனை மரங்களில் இருந்து கள் இறக்கப்படுகிறது. அதனை உடனே வாங்கி குடிப்பதற்காக அதிகாலை முதலே திருபுவனை ஏரிக்கரைக்கு புதுவை மற்றும் விழுப்புரம் பகுதிகளை சேர்ந்த மதுபிரியர்கள் பலர் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் வருகிறார்கள்.

இவர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதால் காலை நேரத்தில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது. மேலும் அதிகமாக கள் குடிப்பவர்கள் போதையில் தள்ளாடிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் செல்கிறார்கள். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

வில்லியனூர் போக்குவரத்து போலீசார் இந்த இடத்தில் போக்குவரத்தை சரி செய்தாலும் தினந்தோறும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. திருபுவனை பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால் தொழிலாளர்கள் கள்ளை குடித்துவிட்டு வேலைக்கு செல்வதாக கூறப்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

மதுபானம், சாராயத்தை விட கள் விலை குறைவு என்பதால் அதன் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. சாலையோரத்தில் 500 மீட்டர் தூரத்திற்கு மதுபானங்கள் விற்பனை செய்ய சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

ஆனால் புதுவை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story