இலங்கை- காரைக்கால் பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு கவர்னர் தடை நாராயணசாமி குற்றச்சாட்டு


இலங்கை- காரைக்கால் பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு கவர்னர் தடை நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 March 2020 5:43 AM IST (Updated: 2 March 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு தடை விதிக்க கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

இலங்கை பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் ஆன்மிக சுற்றுலாவாக தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக இலங்கை- காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்கு வரத்தை தொடங்க வேண்டும் என்று புதுவை அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது.

மத்திய மந்திரி அறிவிப்பு

இந்த நிலையில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை மந்திரி மன்சுக் மாண்டவியா கடந்த 27-ந் தேதி புதுவை வந்தார். அவர் புதுவை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இலங்கை- காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த திட்டம் தனியார் பங்களிப்புடன் மத்திய- மாநில அரசுகளின் ஆதரவோடு செயல்படுத்தப்படும் என்றார்.

கவர்னர் முட்டுக்கட்டை

இந்த நிலையில் இலங்கை- காரைக்கால் கப்பல் போக்குவரத்திற்கு கவர்னர் கிரண்பெடி முட்டுக்கட்டை போடுவதாகவும், இ்ந்த திட்டத்தை செயல்படுத்த கூடாது என மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதி இருப்பதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசுக்கு கடிதம்

புதுவை மாநில வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தால், கவர்னர் கிரண்பெடி அதனை செயல்படுத்த விடாமல் தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார்.

இலங்கை- காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் கவர்னர் கிரண்பெடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். கவர்னர் கிரண்பெடியின் இத்தகைய செயல்பாடுகளால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் முன்பு போராட்டம்

புதுவையில் உள்ள ரோடியர் மில், சுதேசி-பாரதி மில்களை நவீனப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி தர வலியுறுத்தி பஞ்சாலை சங்க நிர்வாகிகள் சார்பில் டெல்லியில் நாடாளுமன்றம் முன்பு வருகிற 5-ந் தேதி நடைபெறும் போராட்டத்தில் நானும், அமைச்சர்களும் கலந்துகொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாராயணசாமி எச்சரிக்கை

புதுவை கடற்கரை செயற்கை மணல் பரப்பு பகுதிக்கு நேற்று இரவு முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர போலீசாரிடம், அவர்களின் பணி நேரம் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், செயற்கை மணல்பரப்பு பகுதியில் பொதுமக்களை குளிக்க விடக்கூடாது, இரவு 11 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும், இதில் தவறினால் சம்பந்தப்பட்ட போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்படு வார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Next Story