ஆலைகளுக்கு சீல் வைப்பு எதிரொலி: மாநகராட்சி குடிநீர் விற்பனை நிலையத்தில் குவியும் பொதுமக்கள்


ஆலைகளுக்கு சீல் வைப்பு எதிரொலி: மாநகராட்சி குடிநீர் விற்பனை நிலையத்தில் குவியும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 March 2020 6:00 AM IST (Updated: 2 March 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

சுத்திகரிப்பு குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதன் எதிரொலியாக மாநகராட்சி குடிநீர் விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் குவிகின்றனர்.

ஈரோடு, 

சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உரிய அனுமதி பெறாத சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 33 குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக கேன்கள் மூலமாக வினியோகிக்கப்பட்டு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

ஈரோட்டில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை பயன்படுத்தாமல், கேன் மூலமாக வினியோகிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது அந்த தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளதால், மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை மீண்டும் பயன்படுத்த ஆயத்தமாக வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோட்டில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் விற்பனை நிலையத்தை பொதுமக்கள் பலர் நாடி செல்கிறார்கள். இதனால் அங்கு பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து செல்கிறார்கள். ஒரு லிட்டர் குடிநீர் ரூ.1-க்கும், 20 லிட்டர் குடிநீர் ரூ.7-க்கும் வழங்கப்படுகிறது.

மேலும், ஆற்று நீரை பலரும் மீண்டும் குடிக்க பயன்படுத்த தொடங்கி இருப்பதால், தினமும் சீராகவும், சுகாதாரமான முறையிலும் குடிநீரை வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story