மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கொடியேற்றம் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றம்
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி கொடைவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி கொடைவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, சிறப்பு செண்டை மேளம் நடந்தது. 7.50 மணிக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.
தமிழிசை சவுந்தரராஜன்
கொடியேற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், கலெக்டர் பிரசாந்த் வடநேரே, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், விஜயகுமார் எம்.பி., பிரின்ஸ் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் சரண்யா அரி, குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி, கோவில் தந்திரி மகாதேவரு அய்யர், அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம், மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு, கல்குளம் தாசில்தார் ராஜாசிங், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், துணைத்தலைவர் சிவகுமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் மராமத்து பொறியாளர் அய்யப்பன், ஜீவானந்தம், இந்து சேவா சங்கம், ஸ்ரீதேவி கலா மன்றம், தேவி சேவா சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்கம் சார்பில் 83-வது சமய மாநாட்டு கொடியை தலைவர் கந்தப்பன் ஏற்றி வைத்தார். வெள்ளிமலை ஸ்ரீவிவேகானந்த ஆசிரமம் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் மாநாட்டை திறந்து வைத்து உரை ஆற்றினார். சுவாமி கருணானந்தஜி மகராஜ், வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா ஆகியோர் ஆசியுரை வழங்கினர். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி பேசினார். மதியம் கருமன்கூடல் கே.எஸ்.வி.பவனில் இருந்து அம்மனுக்கு சீர் கொண்டு செல்லும் நிகழ்ச்சி, 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை ராஜ ராஜேஸ்வரி பூஜை, 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை ஆகியவை நடந்தது. மேலும் கோவிலின் முன்பு திரளான பெண்கள் பொங்கலிட்டனர்.
வலியபடுக்கை பூஜை
மாசிக்கொடையின் முக்கிய வழிபாடான வலியபடுக்கை பூஜை வருகிற 6-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. 9-ம் நாள் இரவு மற்றொரு முக்கிய வழிபாடான பெரிய சக்கர தீவெட்டி பவனியும், 10-ம் நாள் விழாவான நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Related Tags :
Next Story