ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள்
வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளரை இடமாற்றம் செய்யக்கோரி அரசு பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர். 2 மணி நேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி,
ஊராட்சி செயலாளர் ஆலங்காயம் ஒன்றியம் மதனாஞ்சேரி ஊராட்சியில் கடந்த பல வாரங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை. இந்த ஊரை சேர்ந்தவர்கள் 100 நாள் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கான பண பலன்கள் உரிய நேரத்தில் கிடைக்காமல் தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு ஊராட்சி செயலாளர் பாண்டியன்தான் காரணம் என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் குடிநீரும் கிடைக்காத நிலையில் 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய தொகை முறையாக வழங்கப்படாததாலும் பாதிக்கப்பட்டோர் ஆத்திரம் அடைந்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து அவர்கள் நேற்று காலை 8.30 மணியளவில் ஆலங்காயம் சாலையில் திரண்டனர். அப்போது அந்த வழியாக வாணியம்பாடியிலிருந்து அரங்கல்துருகத்துக்கு சென்ற பஸ் வந்தது. அதனை போராட்டக்காரர்கள் சிறைபிடித்தனர். இதனால் அதில் வந்த பயணிகள் தவிப்புக்குள்ளாயினர். தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் பஸ்சை விடுவித்து உங்கள் கோரிக்கைகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளலாம் என்றனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் சம்மதிக்கவே பஸ் விடுவிக்கப்பட்டது.
பின்னர் அனைவரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கு இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். ஊராட்சி செயலாளர் பாண்டியனை மாற்றிவிட்டு புதிய செயலாளரை நியமிக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். அப்போது ஊராட்சி செயலாளர் பாண்டியனின் உறவினர் ஒருவர் அங்கு வந்து பேச முயன்றார். அவரிடம் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உயர் அதிகாரிகள் போராட்டககாரர்களை தொடர்பு கொண்டு ஊராட்சி செயலாளரை மாற்றுவது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story