434 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை; போலீஸ் அதிகாரி தகவல்


434 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை; போலீஸ் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 2 March 2020 10:00 PM GMT (Updated: 2 March 2020 4:00 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் குடிபோைதயில் வாகனம் ஓட்டிய 434 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, மணல் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கவும், இவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் தீவிர ரோந்துப்பணி மற்றும் வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

போக்குவரத்து விதி மீறும் நபர்கள் மற்றும் மணல் கடத்தல், மோட்டார்சைக்கிள் திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மணல் கடத்திய, சாராயம் காய்ச்சிய, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்ட 19 பேர் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தது, தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்தியது, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக 70 ஆயிரத்து 499 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.79 லட்சத்து 98 ஆயிரத்து 300 வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 434 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் தெரிவித்துள்ளார்.

Next Story