குடிநீர் விற்பனையாளர்கள் கலெக்டரிடம் மனு ; பிரச்சினைக்கு தீர்வுகாண கோரிக்கை
குடிநீர் விற்பனை பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் விற்பனையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கே.எஸ். கந்தசாமி தலைமை நடந்தது. கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 642 மனுக்கள் பெறப்பட்டது.
அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மனுகொடுக்க வந்திருந்த பவித்திரம் பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாக போர்டிகோ முன்பு மண்எண்ணெயை தனது மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தனக்கும் பக்கத்து நிலத்துகாரருக்கும் இடையே நிலப்பிரச்சினை உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்த சுமார் 25–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து கொடுத்த மனுவில் நாங்கள் பழங்குடியினர் இந்து காட்டு நாயக்கன் சாதியை சேர்ந்தவர்கள். எங்கள் குழந்தைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு சாதிச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளனர். முன்னதாக அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச்செய்தனர்.
கேன் குடிநீர் விற்பனையாளர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில் நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்து வருகிறோம். விற்பனை முகவர்களாக சுமார் 2 ஆயிரம் பேர் இருக்கின்றனர். மேலும் எங்களிடம் ஓட்டுனராகவும், கூலி தொழிலாளர்களாகவும் சுமார் 16 ஆயிரம் பேர் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலையே வாழ்வாதாரமாக வைத்து பிழைத்து வருகிறோம். தற்சமயம் கோர்ட்டு உத்தரவால் குடிநீர் உற்பத்தி தொழிற்கூடங்கள் மூடப்பட்டு உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்கள் குடிநீர் தேவையையும், கிரிவலம் வரும் பக்தர்களின் குடிநீர் தேவையையும், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், உணவகங்கள் அனைத்திற்கும் 90 சதவீதம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறோம்.
கோர்ட்டு உத்தரவால் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும். குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்டு இயல்பு நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்று கூறி உள்ளனர்.
கூட்டத்தில் துணை கலெக்டர் (பயிற்சி) மந்தாகினி, மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், தாட்கோ பொது மேலாளர் ஆர்.ஏழுமலை, ஆதி திராவிடர் நல அலுவலர் கதிர்சங்கர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story