தூத்துக்குடியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது - 19,782 மாணவ-மாணவிகள் எழுதினர்


தூத்துக்குடியில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது - 19,782 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 2 March 2020 10:00 PM GMT (Updated: 2 March 2020 5:05 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று காலை தொடங்கியது. இத்தேர்வை 19,782 மாணவ-மாணவிகள் எழுதினர்.

தூத்துக்குடி, 

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று காலை தொடங்கியது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முதல் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டம் முழுவதும் உள்ள 197 பள்ளிக்கூடங்களை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 8 ஆயிரத்து 863 மாணவர்கள், 10 ஆயிரத்து 919 மாணவிகள் ஆக மொத்தம் 19 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதினர். இதில் 81 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர்.

நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பிளஸ்-2 தேர்வை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உடன் இருந்தார்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வை கண்காணிக்க 228 பறக்கும் படை உறுப்பினர்கள், 1500 அறை கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதே போன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிலான அலுவலர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்து, குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 23 தேர்வு மையங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 312 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 2,353 பேரும், மாணவிகள் 2,959 பேரும் தேர்வு எழுதினர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் மாணவர்கள் 151 பேரும், மாணவிகள் 133 பேரும் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வில் முறைகேடுகளை களையும் வகையில், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன் தலைமையில், 25 பறக்கும்படையினர் தேர்வு மையங்களுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வினை கண்காணிக்கும் ஆசிரியர்களை தவிர மற்றவர்களை அனுமதிக்கவில்லை.

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையத்தை உதவி கலெக்டர் விஜயா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து வருகிற 24-ந்தேதி வரையிலும் பிளஸ்-2 தேர்வு நடைபெற உள்ளது.

மேலும், பிளஸ்-1 தேர்வுகள் நாளை(புதன்கிழமை) தொடங்கி, 26-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 200 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 16 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 13-ந் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நடக்கிறது. இதில் 22 ஆயிரத்து 979 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் என்று கூறினார்.

Next Story