சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயற்சி


சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 2 March 2020 10:45 PM GMT (Updated: 2 March 2020 5:26 PM GMT)

சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள உல்லத்தட்டி, ஜக்ககம்பை, கெரடாமட்டம், சுண்டட்டி ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 23 ஆயிரம் செலவில் சாலை சீரமைப்பு பணி தொடங்கியது. இந்த பணியானது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மேற்பார்வையில் நடந்து வந்தது.

ஆனால் அடுத்த சில மாதங்களில் சாலை சீரமைப்பு பணி கிடப்பில் போடப்பட்டது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால், சாலையில் போடப்பட்ட ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் ஜக்ககம்பை கிராமத்தில் சாலை சீரமைப்பு பணி மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் உல்லத்தட்டி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த உல்லத்தட்டி கிராம மக்கள் நேற்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகுமார் விரைந்து வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாமதமாக சாலை சீரமைப்பு பணியை செய்து வரும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஜக்ககம்பை கிராமத்தில் சாலை சீரமைப்பு பணி முடிந்தவுடன், உல்லத்தட்டி கிராமத்தில் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story