கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்


கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கு: வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 March 2020 12:00 AM GMT (Updated: 2 March 2020 5:53 PM GMT)

கார் உரிமையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நடவடிக்கை எடுத்தார்.

திருச்சி,

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே தவுட்டுப்பாளையத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதி கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் மாணிக்கவல்லி என்பவர் இறந்தார். இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த ராஜசேகரனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் காரை மோட்டார் வாகன ஆய்வுக்கு அனுப்ப வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, காரின் உரிமையாளரான சேலத்தை சேர்ந்த அபிஷேக்மாறனிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். மேலும் காரை ஆவணங்களுடன் மோட்டார் வாகன ஆய்விற்கு அனுப்பி வைக்க போலீஸ் நிலைய எழுத்தரான ஏட்டு செந்தில்குமார் தனக்கு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என அவரும் கேட்டார்.

இது தொடர்பாக கரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் அபிஷேக்மாறன் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கடந்த மாதம் 26-ந் தேதி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு செந்தில்குமாரிடம், ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை அபிஷேக்மாறன் கொடுத்தார். அப்போது அவரை கையும், களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவிட்டார்.

இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

இந்த வழக்கில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமியை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேற்று உத்தரவிட்டார். லஞ்ச புகார் வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story