ராஜபாளையத்தில் சாலையோர மின்கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஆஜராக வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ராஜபாளையத்தில் சாலையோர மின்கம்பங்களை அகற்றக்கோரி வழக்கு: நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் ஆஜராக வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 March 2020 4:00 AM IST (Updated: 3 March 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் சாலையோரங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர் நேரில் ஆஜராகும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ராமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் ராஜபாளையம் உள்ளது. இந்த சாலை வழியாக பல்வேறு முக்கிய நகரங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் ராஜபாளையத்தில் ஏராளமான பஞ்சு ஆலைகளும் உள்ளன. இந்த ஆலைகளுக்கும் நூற்றுக்கணக்கான லாரிகளும் நகருக்குள் வந்து செல்கின்றன. ராஜபாளையத்தில் குடியிருப்புகளும், மக்கள் நெருக்கமும் அதிகரித்துவிட்டதால் சாலைகள் குறுகிவிட்டன. சாலைகளின் ஓரத்தில் உள்ள மின் கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்து வருகின்றன. இதனால் எங்கள் பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கின்றன. இதனால் பலர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் நிற்கும் மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அகற்றி, சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சரவணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து நெடுஞ்சாலைத்துறையின் நெல்லை திட்ட இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story