தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை- பணம் கொள்ளை: 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள கொங்கம்பட்டு ஆண்டாள் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி மகன் மணிகண்டன் (வயது 35). இவர் புதுச்சேரி மாநிலம் ஏரிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சுகந்தி, மாமியார் சாந்தா மற்றும் 2 மகள்களுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1.15 மணியளவில் பனியன், டவுசர் அணிந்தபடியும், முகத்தை துணியால் மூடிக்கொண்டபடியும் மர்ம நபர்கள் 2 பேர், மணிகண்டன் வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்குள்ள ஒரு அறையில் இருந்த பீரோவை கள்ளச்சாவி மூலம் திறந்து அதில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.11 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். இதனிடையே சத்தம் கேட்டதும் தூக்கத்தில் இருந்து மணிகண்டன் எழுந்து மின்விளக்கை போட்டார். அந்த சமயத்தில் கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை மணிகண்டன் மடக்கிப்பிடிக்க முயற்சி செய்யும்போது அவரை கொள்ளையர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த இரும்புக்கம்பியால் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியரை தாக்கி நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story