காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் ரூ.4¾ லட்சம் கொடி நாள் நிதியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது


காஞ்சீபுரத்தில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் ரூ.4¾ லட்சம் கொடி நாள் நிதியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 2 March 2020 10:30 PM GMT (Updated: 2 March 2020 8:26 PM GMT)

காஞ்சீபுரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பயனாளிகள் பலருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. அப்போது ரூ.4¾ லட்சம் கொடி நாள் நிதியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையம் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இதில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை. வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வரப்பெற்றன.

அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல்நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மனுக்களை வழங்கினார்.

மேலும், இக்கூட்டத்தில் வருவாய்த் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,

3 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார். அதன் பின்னர், வாலாஜாபாத் வட்டம் மாகரல் கிராமத்தை சேர்ந்த 11 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும் கொடி நாள் நிதி வசூலாக குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக அவர்கள் ரூ.2.75 லட்சமும், காஞ்சீபுரம் நகராட்சி அலுவலகம் சார்பாக ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்திற்கான காசோலைகளை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மாலதி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story