தலமலை அருகே, வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை


தலமலை அருகே, வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானை
x
தினத்தந்தி 2 March 2020 10:30 PM GMT (Updated: 2 March 2020 8:33 PM GMT)

தலமலை அருகே வாகன ஓட்டிகளை ஒற்றை யானை துரத்தியது.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, ஜீர்கள்ளி உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்துவிட்டன. செடி, கொடிகள் கருகிவிட்டன. வனக்குட்டைகள் தண்ணீரின்றி வற்றிவிட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் வனச்சாலை பகுதியில் சுற்றித்திரிகின்றன.

குறிப்பாக யானைகள் இடம்பெயரும் வழித்தடமாக தலமலை, ஆசனூர் வனப்பகுதி உள்ளது. இதனால் யானைகள் அங்குள்ள வனச்சாலையை அடிக்கடி கடந்து ெசல்கின்றன.

இதன் காரணமாக அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தங்களுடைய வாகனங்களை 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக இயக்க வேண்டும் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். மேலும் ஆங்காங்கே வேகத்தடை அமைக்கப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக தலமலை பகுதியில் சாலையோரம் ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிகிறது. திம்பத்தில் இருந்து தலமலை வரையிலான சாலையோர பகுதியில் இந்த யானை நடமாடுகிறது. இந்த யானையானது அங்குள்ள வனச்சாலையில் வாகனங்களில் செல்வோரை ஆக்ரோஷம் அடைந்து துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வனப்பகுதியில் உள்ள குட்டைகளிலோ அல்லது செயற்கை குட்டைகள் ஏற்படுத்தியோ லாரி மற்றும் சரக்கு வேன்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Next Story