கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி, மகனுடன் தீக்குளிக்க முயற்சி நாமக்கல்லில் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி, மகனுடன் தீக்குளிக்க முயற்சி நாமக்கல்லில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 March 2020 10:45 PM GMT (Updated: 2 March 2020 9:39 PM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி, மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள பவித்திரத்தை சேர்ந்தவர் ரமே‌‌ஷ்காந்த் (வயது 42). இவர் பவித்திரம் பிரதான சாலையில் ஆயில்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று தனது மனைவி கங்கேஸ்வரி (40), மகன் பரந்தாமன் (12) ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார்.

இந்தநிலையில் திடீரென 3 பேரும் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக நல்லிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கணவன்-மனைவி கைது

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பத்திரத்தை வைத்து கடன் வாங்கிய பிரச்சினையில் கடை பூட்டப்பட்டு விட்டதாகவும், இதுதொடர்பாக எருமப்பட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து தற்கொலைக்கு முயன்றதாக ரமே‌‌ஷ்காந்த், அவரது மனைவி கங்கேஸ்வரி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பெண் தீக்குளிக்க முயற்சி

பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மனைவி கிரு‌‌ஷ்ணவேணி (36). இவர் நேற்று தனது தாயார் கலாமணி (55) மற்றும் 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். திடீரென கிரு‌‌ஷ்ணவேணி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தனது வீட்டுக்கு முன்பு வேறொரு சமூகத்தை சேர்ந்த பெண் அத்துமீறி நுழைந்து குடிசை போட்டு இருப்பதாகவும், ஆக்கிரமிப்பு குடிசையை அகற்றக்கோரி பலமுறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். அவர் மீதும் போலீசார் தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவங்களால் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story