மாவட்டம் முழுவதும், 130 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 35,525 மாணவ, மாணவிகள் எழுதினர் கலெக்டர் ராமன் ஆய்வு


மாவட்டம் முழுவதும், 130 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 35,525 மாணவ, மாணவிகள் எழுதினர் கலெக்டர் ராமன் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2020 4:30 AM IST (Updated: 3 March 2020 3:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நேற்று 130 மையங்களில் நடந்த பிளஸ்-2 தேர்வை 35 ஆயிரத்து 525 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வை மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு செய்தார்.

சேலம்,

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 24-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 17 ஆயிரத்து 30 மாணவர்கள், 20 ஆயிரத்து 258 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 288 பேர் பிளஸ்-2 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் 822 மாணவர்களும், 941 மாணவிகளும் என மொத்தம் 1,763 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனால் 35 ஆயிரத்து 525 மாணவ-மாணவிகள் மட்டும் பிளஸ்-2 தமிழ் தேர்வை எழுதினர். இதில், 16 ஆயிரத்து 208 மாணவர்களும், 19 ஆயிரத்து 317 மாணவிகளும் அடங்குவர். இந்த தேர்வுக்காக மாவட்டம் முழுவதும் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தனித்தேர்வர்கள் சிலரும் பிளஸ்-2 தேர்வை எழுதினர்.

தேர்வையொட்டி மாணவ, மாணவிகள் பலர் காலை 8 மணி முதலே அந்தந்த தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். முன்னதாக அவர்களில் பலர் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். சேலம் ராஜகணபதி மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சில மாணவ, மாணவிகள் சென்று வழிபட்டனர்.

ஆசிரியர்கள் அறிவுரை

ஒரு சில பள்ளிகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று அதிக மதிப்பெண் எடுக்க வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்தனர். சில பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு குறித்து ஆசிரியர்கள் சில அறிவுரைகள் வழங்கினர்.

தேர்வுகளில் முறைகேடுகள் ஏதேனும் நடைபெறாமல் தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டிருந்தது. பறக்கும் படையினர் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு அவ்வப்போது சென்று கண்காணித்தனர். இதுதவிர, தேர்வு நடைபெறும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கலெக்டர் ஆய்வு

தேர்வு மையங்களின் நுழைவு வாசலில் ‘இது தடை செய்யப்பட்ட பகுதி’ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தன. பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில கைதிகள் சென்னை புழல் சிறையில் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

சேலம் மாவட்டத்தின் தேர்வு மையங்களில் ஒன்றான சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணே‌‌ஷ்மூர்த்தி உடனிருந்தார்.

இது குறித்து கலெக்டர் ராமன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 130 தேர்வு மையங்களில் 135 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 135 துறை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட மாணவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


Next Story