அவுரங்காபாத் பெயரை பா.ஜனதா ஆட்சியில் மாற்றாதது ஏன்? சிவசேனா கேள்வி


அவுரங்காபாத் பெயரை பா.ஜனதா ஆட்சியில் மாற்றாதது ஏன்? சிவசேனா கேள்வி
x
தினத்தந்தி 3 March 2020 4:20 AM IST (Updated: 3 March 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

அவுரங்காபாத் பெயரை சம்பாஜி நகர் என பாரதீய ஜனதா ஆட்சியில் மாற்றாதது ஏன் என்று சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.

மும்பை,

மத்திய மராட்டியத்தின் தொழில்நகரமாக விளங்குகிறது அவுரங்காபாத். 17-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் இந்த பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையில், அவுரங்காபாத்தின் பெயரை மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் நினைவாக சம்பாஜி நகர் என மாற்ற வேண்டும் என முதன் முறையாக சிவசேனா குரல் எழுப்பி இருந்தது.

தற்போது சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு, அவுரங்காபாத்தின் பெயரை மாற்ற வேண்டும் என பாரதீய ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கடந்த வாரம் கோரிக்கை விடுத்தார். அப்போது நாங்கள் மன்னர் சத்ரபதி சிவாஜி மற்றும் அவரது மகன் சம்பாஜியின் சந்ததியினர். அவுரங்கசீப்பின் வழிதோன்றல்கள் அல்ல என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பாரதீய ஜனதாவுக்கு சிவசேனா பதிலடி கொடுத்து உள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் இதுபற்றி கூறப்பட்டு உள்ளதாவது:-

தாங்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வழித்தோன்றல்கள் என்று சந்திரகாந்த் பாட்டீல் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இங்கு யாரும் அவுரங்கசீப்பின் வழித்தோன்றல்கள் அல்ல. பாரதீய ஜனதா கடந்த 5 ஆண்டுகளில் சத்ரபதி சிவாஜியின் பெயரை உச்சரித்து வருகிறது. ஆனால் இப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடியை சத்ரபதி சிவாஜியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் அவர்களுக்கு தைரியம் வந்து விட்டது.

மராட்டியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தது. இன்னும் மத்தியில் அந்த கட்சி ஆட்சியில் இருக்கிறது.

நீங்கள் (பா.ஜனதா) ஏன் அவுரங்காபாத்தின் பெயரை மாற்றவில்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அலகாபாத் மற்றும் அந்த மாநிலத்தின் பிற நகரங்களின் பெயரையும் மாற்றி உள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பே பாலாசாகேப் (பால்தாக்கரே) சம்பிநகர் என பெயர் சூட்டினார் என்பதை பாரதீய ஜனதா நினைவில் கொள்ள வேண்டும். வீர சாவர்க்கருக்கு பாரதீய ஜனதா பாரத ரத்னா விருது வழங்கவில்லை. மும்பையில் மன்னர் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்துக்கு ஒரு செங்கலை கூட போடவில்லை. அந்த கட்சி தேசியவாதத்தின் மீதான அரசியலையே விரும்புகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story