குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மாநகராட்சி முன்பு இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் - ஏராளமானவர்கள் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மாநகராட்சி முன்பு அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய மக்கள் பதிவேடு உள்ளிட்ட திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பல பகுதிகளில் கருப்பு பலூன் பறக்க விடும் போராட்டம், சாலை மறியல், ரெயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினர் சார்பில் மாநகராட்சி முன்பு நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், டெல்லியில் கலவரத்திற்கு உடந்தையாக இருந்த போலீசாரை கண்டிப்பது, இந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் முகம்மது யாசர் தலைமை தாங்கி பேசினார். பொருளாளர் தஸ்தகீர் வரவேற்று பேசினார். தலைவர் அப்துல் மஜீத் மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலை வகித்து பேசினார்கள்.
இதில் பெரியபள்ளி வாசல் தலைமை இமாம் முப்தி சல்மான் பாரிஸ் பாகவி ஹஜ்ரத், த.மு.மு.க. மாநில செயலாளர் கோவை சாதிக் உள்பட பலர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதையொட்டி மாநகராட்சி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Related Tags :
Next Story