நெல்லை, தென்காசி-தூத்துக்குடி மாவட்டங்களில் 46 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்' வைப்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 46 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்‘ வைத்தனர்.
தென்காசி,
தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் நிலத்தில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் உறிஞ்சி எடுப்பதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைகிறது என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நிலத்தடி நீரை எடுப்பதற்கான உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்‘ வைக்க உத்தரவிட்டது.
இதையடுத்து அனுமதி இல்லாமல் இயங்கி வரும் ஆலைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. மாநிலம் முழுவதும் இதுவரை 300-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். பொதுப்பணித்துறையின்கீழ் உள்ள நிலத்தடி நீர் ஆதாரத்துறையின் நிலத்தடி நீர் எடுத்தல் பிரிவின் நெல்லை மண்டல நிர்வாக பொறியாளர் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 48 குடிநீர் ஆலைகள் உள்ளன. அனைத்து ஆலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 12 ஆலைகள் உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. மேலும், 8 ஆலைகளின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை. அந்த 20 ஆலைகளுக்கும் அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்‘ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதாரத்துறையின் நெல்லை மண்டல அலுவலகம் பாளையங்கோட்டையில் உள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
இந்த மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் மொத்தமுள்ள 48 குடிநீர் ஆலைகளில், உரிமம் இல்லாத 20 ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 34 ஆலைகள் உள்ளன. அதில் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 11 ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 57 குடிநீர் ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 15 ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 46 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 49 குடிநீர் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த ஆலைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 3 குடிநீர் ஆலைகளுக்கு ‘சீல்‘ வைக்கப்பட்டு உள்ளது. அரசு அனுமதி இன்றி நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story