போலி கையெழுத்து போட்டு மோசடி: இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை


போலி கையெழுத்து போட்டு மோசடி: இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 2 March 2020 11:40 PM GMT (Updated: 2 March 2020 11:40 PM GMT)

காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ததாக இளநிலை பொறியாளர் உள்பட 2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காரைக்கால்,

காரைக்கால் வரிச்சிக்குடியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியத்தில் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற கடந்த 2012-ம் ஆண்டு விண்ணப்பித்தார். அதையடுத்து அவருக்கு வீடு கட்டுவதற்காக 2 முறை தவணை தொகை வழங்கப்பட்டது. 3-வது தவணை தொகை பெற குடிசை மாற்று வாரிய ஊழியர் காளிதாஸ் உதவியை நாடினார்.

அப்போது காளிதாஸ் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாததால் சென்னை சி.பி.ஐ. போலீசாரிடம் தமிழ்செல்வியின் சகோதரர் சீனிவாசன் புகார் செய்தார்.

பணம் கையாடல்

அதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி காரைக்கால் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் லஞ்சம் வாங்கும் போது காளிதாசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது தமிழ்செல்விக்கு வழங்க வேண்டிய 3-வது தவணை தொகையை குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அருள்மொழி, மஸ்தூர் ஊழியர் ஆன்ட்ரூ மில்லர் ஆகியோர் போலியாக கையெழுத்து போட்டு மோசடி செய்து பணத்தை கையாடல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அருள்மொழி, ஆன்ட்ரூமில்லர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கை காரைக்கால் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் லஞ்சம் வாங்கியதற்காக குடிசை மாற்று வாரிய ஊழியர் காளிதாசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

போலி கையெழுத்து போட்டு பணத்தை கையாடல் செய்து மோசடி செய்ததாக ஈடுபட்ட குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அருள்மொழி, மஸ்தூர் ஊழியர் ஆன்ட்ரூ மில்லர் ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.

Next Story