குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் தேவை இல்லை துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேச்சு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் தேவை இல்லை துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேச்சு
x
தினத்தந்தி 3 March 2020 5:20 AM IST (Updated: 3 March 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என்று துணை முதல்-மந்திரி அஜித்பவார் தெரிவித்து உள்ளார்.

மும்பை,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மராட்டியத்தை பொறுத்தவரை இந்த சட்டங்கள் தொடர்பாக மராட்டியத்தில் ஆளும் சிவசேனா கூட்டணியில் முரண்பாடு இருந்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தால் யாரும் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். எனவே இந்த சட்டத்தால் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை மராட்டியத்தில் நடத்துவதை தடுக்க மாட்டோம் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார். அதே நேரத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார்.

ஆனால் மராட்டியத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த கூடாது. இது இந்தியாவின் மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்டது போல் மராட்டிய சட்டசபையில் அந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் வலியுறுத்தியது.

இந்த நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தேவை இல்லை என்று தேசியவாத காங்கிரசை சேர்ந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறி உள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிய சட்டங்கள் யாருடைய குடியுரிமையும் பறிக்காது.

எனவே, அவற்றுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது தேவையில்லாத ஒன்று. பீகாரை பின்பற்றி தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராகவும் தீர்மானம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிலா் தவறான தகவல்களை கொண்டு வதந்தி பரப்பி வருகிறார்கள். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Next Story