திருவட்டார் அருகே பரபரப்பு: பள்ளி மாணவர்கள் 3 பேர் திடீர் மாயம்- கடத்தப்பட்டனரா? போலீஸ் விசாரணை


திருவட்டார் அருகே பரபரப்பு: பள்ளி மாணவர்கள் 3 பேர் திடீர் மாயம்- கடத்தப்பட்டனரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 March 2020 10:41 AM IST (Updated: 3 March 2020 10:41 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே பள்ளி மாணவர்கள் 3 பேர் திடீரென மாயமாயினர். அவர்கள் கடத்தப்பட்டனரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள்
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கண்ணனூர் பள்ளிச்சாவிளையைச் சேர்ந்த ராஜசேகர் மகன் அஸ்வின் சேம் (வயது 15), காட்டாத்துறையில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கண்ணனூர் பொன்விளாகத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜ் மகன் செல்வின் ஜோஸ் (14), காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். கண்ணனூர் வாறுவிளையைச் சேர்ந்த விஜில்குமார் மகன் சேம்ரூபன் (14). நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் அஸ்வின் சேம், தனது வீட்டில் இருந்து ஒரு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். அவனுடன் மற்ற 2 மாணவர்களும் சென்றதாக கூறப்படுகிறது.

கடத்தப்பட்டனரா?
இந்தநிலையில் 3 மாணவர்களும் திடீரென மாயமாயினர். அவர்கள் எங்கு சென்றனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களது உறவினர்களது வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அந்த மாணவர்களின் பெற்றோர் திருவட்டார் போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 3 மாணவர்களும் ஒரே நேரத்தில் மாயமாகி இருப்பதால் அவர்கள் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மாணவர்கள் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கத்திக்குத்து
* தக்கலை கேரளபுரம் சூரன்தரைவயல்விளை பகுதியை சேர்ந்த கொத்தனார் முருகேசன் (60), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவசதீ‌‌ஷ்குமார் (30) என்பவருக்கும் வழி பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகேசனை, சிவசதீஷ்குமார் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசதீ‌‌ஷ்குமாரை தேடி வருகின்றனர்.

ரேஷன் அரிசி
* கொல்லங்கோடு காக்கவிளையில் இருந்து ஊரம்பு நோக்கி சென்ற ஆட்டோவை, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் சந்தேகத்தின் பேரில மடக்கி பிடித்து சோதனை செய்தார். அந்த ஆட்டோவில் 125 கிலோ ரே‌‌ஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து ரே‌‌ஷன் அரிசியுடன் ஆட்டோவை பறிமுதல் செய்தார். மேலும், ஆட்டோ டிரைவரான காக்கவிளையை சேர்ந்த விஜயகுமார்(51) என்பவரையும் ேபாலீசார் கைது செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட ரே‌‌ஷன் அரிசியையும், ஆட்டோ டிரைவரையும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

* குழித்துறையை அடுத்த பாகோடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி நேசமணி (70), இவர் அங்குள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதியதில், நேசமணி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று, நேசமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story