கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக ஷயான், மனோஜ் உள்பட 10 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜரானார்கள்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரை கோவை மத்திய சிறையில் இருந்து போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இதேபோன்று மற்ற 8 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
வாக்குமூலம்
மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் 10-வது சாட்சியான கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் நடராஜ் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவரிடம், அரசு வக்கீல் நந்தகுமார் விசாரணை நடத்தினார். விசாரணையின்போது,‘கோடநாடு பங்களாவில் கொள்ளை போன காண்டாமிருக கண்ணாடி உருவம், ரத்த கறைபடிந்த துணி, செல்போன் ஆகியவை ஏற்கனவே என்னிடம் காண்பிக்கப்பட்டு போலீசாரால் பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கில் சம்பந்தப்பட்ட சதீசன், திபு, மனோஜ்சாமி, உதயகுமார், மனோஜ் ஆகியோர்களிடம் எனது முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது’என்று நடராஜ் கூறினார்.
அதனை தொடர்ந்து கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை நடராஜ் அடையாளம் காட்டினார். ஒரு கார் கேரளாவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாடு பதிவெண் பொருத்தப்பட்டு, சம்பவத்தன்று கோடநாடுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
விசாரணை தள்ளிவைப்பு
இதையடுத்து 11-வது சாட்சியான கார் உரிமையாளர் நவ்சத், ‘இன்று(அதாவது நேற்று) காலை 11 மணியளவில் நானும், மற்றொரு சாட்சியான ஷகன்ஷாவும் மகளிர் நீதிமன்றம் முன்பு நின்றிருந்தோம். அப்போது என்னை பாதிக்கும்படி நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தால் நீயும் பாதிக்கப்படுவாய் என்று ஜித்தின்ராய் மிரட்டினார். மேலும் தனது நண்பர்களுடன் நான் வாங்கிய காரை எடுத்துக்கொண்டு திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்றவர் திரும்ப ஒப்படைக்கவில்லை. இதுகுறித்து 22.4.2017-ந் தேதி கேரளா அரிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன் என்று வாக்குமூலத்தில் தெரிவித்தார். நேற்று 4 சாட்சிகள் வாக்குமூலம் அளித்தனர். எதிர்தரப்பு வக்கீல் ஆனந்த் 2 பேரிடம் குறுக்கு விசாரணை செய்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story