கோவில்பட்டி அருகே உரிமம் புதுப்பிக்காத தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சீல் வைப்பு வெடிமருந்துகள் பறிமுதல்
கோவில்பட்டி அருகே உரிமம் புதுப்பிக்காத தீப்பெட்டி தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே உரிமம் புதுப்பிக்காத தீப்பெட்டி தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த ஆலையில் இருந்த வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
உரிமம் புதுப்பிக்காத தீப்பெட்டி தொழிற்சாலை
தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணு சந்திரன் அறிவுரையின்பேரில், கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் மோகன், இலுப்பையூரணி வருவாய் ஆய்வாளர் அமர்ராஜ் உள்ளிட்ட குழுவினர் நேற்று கோவில்பட்டி அருகே பூசாரிபட்டியில் உள்ள ராஜ்குமாருக்கு (வயது 47) சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த தீப்பெட்டி தொழிற்சாலையின் படைக்கல சட்டத்தின் கீழான உரிமம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31–ந்தேதியுடன் முடிவடைந்ததும், பின்னர் அந்த உரிமத்தை புதுப்பிக்காமல், 2 மாதங்களுக்கு மேலாக தீப்பெட்டி தொழிற்சாலையை அபாயகரமான முறையில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
வெடிமருந்துகள் பறிமுதல்
இதையடுத்து அந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி கொண்டிருந்த 15–க்கு மேற்பட்ட தொழிலாளர்களை அதிகாரிகள் வெளியேற்றினர். பின்னர் அங்குள்ள குடோனில் மூட்டைகளில் இருந்த வெடிமருந்துகளான 195 கிலோ பொட்டாசியம் குளோரைட், 69 கிலோ கந்தகம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த தீப்பெட்டி தொழிற்சாலையை பூட்டி சீல் வைத்தனர். மேலும் தீப்பெட்டி ஆலை உரிமையாளர் ராஜ்குமார் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கூடுதல் கலெக்டருக்கு (வருவாய்) பரிந்துரை செய்தனர்.
Related Tags :
Next Story