அம்பையில் அய்யா வைகுண்டர் அவதார தின மாசி மகா ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
அம்பையில் அய்யா வைகுண்டர் அவதார தின மாசி மகா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அம்பை,
அம்பையில் அய்யா வைகுண்டர் அவதார தின மாசி மகா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அய்யா வைகுண்டர்
அம்பை அருகே உள்ள வாகைகுளம் வாகைபதியில் ஆண்டுதோறும் தைப்பெருந்திருவிழாவும், ஆவணி பெருந்திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறும். அதுபோல் அய்யா அவதார தினவிழாவை முன்னிட்டு அம்பை வாகைபதி அய்யாவழி பக்தர்கள் மற்றும் அம்பை சுற்று வட்டார அன்பு கொடி மக்கள் சார்பில் அவதார தினவிழா மாசி மகா ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெறும்.
அய்யா வைகுண்டர் 188–வது அவதார தினவிழாவான நேற்று மாலை 4.30 மணிக்கு நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் வந்து, அம்பை கிருஷ்ணன் கோவில் திடலை அடைந்தனர். அம்பை கலைவாணி சிலம்பாட்ட குழு சார்பில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஊர்வலம்
வாகைகுளம் வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி முன்னின்று முறை நடத்தும் இந்த ஊர்வலத்தில் பழைய பேட்டை, அகஸ்தியர்பட்டி, தெற்கு பாப்பான்குளம், வேட்டைகாரன்குளம், பாபநாசம், பூங்குறிச்சி, ஊர்க்காடு, அயன்சிங்கம்பட்டி, புதுப்பட்டி, குமாரசாமிபுரம், முக்கூடல், விக்கிரமசிங்கபுரம், அம்பை சுப்பிரமணியபுரம், வைராவிகுளம், அடைச்சாணி, ஆழ்வார்குறிச்சி, செங்குளம், பொழிகரை, அடையகருங்குளம் உள்ளிட்ட 35 அய்யா வழி பதிகளில் இருந்து பல்வேறு வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி வந்தார்.
சிறுவர்– சிறுமியர் கோலாட்டம் மற்றும் இளைஞர்களின் செண்டை மேளம் முழங்க அய்யா அரகரா கோஷத்துடன் ஊர்வலம் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு ஊர்வலம் சென்றது. அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மாசி மகா ஊர்வலமானது அம்பை மெயின் ரோடு வழியாக வாகைபதி சென்றடைந்தது. தொடர்ந்து அந்தந்த பகுதிகளுக்கு வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வாகைகுளம் வாகைபதி அய்யா வழி பக்தர்கள் மற்றும் அம்பை சுற்று வட்டார பகுதி அன்பு கொடி மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story