கோவை வந்த எடப்பாடி பழனிசாமியுடன் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு - என்.பி.ஆருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை


கோவை வந்த எடப்பாடி பழனிசாமியுடன் ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு - என்.பி.ஆருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 4 March 2020 4:30 AM IST (Updated: 3 March 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

கோவை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, ஐக்கிய ஜமாஅத் அமைப்பு நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர். அப்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு (என்.பி.ஆர்) எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

கோவை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை கோவை மாவட்ட ஐக்கிய ஜமா அத் தலைவர் பஷீர் அகமது, பொதுச்செயலாளர் சி.டி.சி. ஜப்பார், நிர்வாகிகள் இப்ராகிம், அனீபா ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். போன்ற கணக்கெடுப்பு முறைகளால் நாடு முழுவதும் மக்களிடையே, குறிப்பாக சிறுபான்மையினரிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. அதில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் இன்னல்கள் தரக்கூடிய அம்சங்கள் உள்ளன. பெரும்பாலும் கணக்கெடுப்புப் பணிக்காக வீடுகள் தோறும் அலுவலர்கள் வரும்போது வீடுகளில் ஆண்கள் இருக்கமாட்டார்கள். வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு அலுவலர்கள் கேட்கும் விவரங்களை தரும் அளவிற்கு கல்வியறிவு அற்றவர்களாக இருப்பதால், பல தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். ஆகியவற்றை இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்கள் அமல்படுத்தமாட்டோம் என்று முடிவெடுத்ததை போல தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென்று நாங்கள் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடான என்.பி.ஆரில் கடந்த 2010-ம் ஆண்டின் போது உள்ள அம்சங்களே 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின் போதும் தொடரவேண்டும். புதிய படிவத்தில் தந்தை, தாய் பிறப்பு விவரங்கள், நாள், இடம் போன்றவை கேட்பதும், பாஸ்போர்ட் எண் கேட்பதும் தேவையற்ற குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்று தாங்கள் மத்திய அரசை வலியுறுத்துமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர், அவர்களிடம் கூறியதாவது:-

என்.பி.ஆரால் சிறுபான்மை மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. இதனால் அவர்கள் அச்சப்பட தேவையில்லை. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டில் ஆட்சேபகரமான அம்சங்கள் இருந்தால் அவற்றை விட்டு விடலாம். ஆனால் தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களை தவறான பாதைக்கு திசை திருப்புகின்றன. அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. அரசு என்ன சொல்கிறதோ அதை தான் செய்யும். ஆனால் எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களிடம் தவறான கருத்துக்களை கூறி அவர்களை ஏமாற்றுகின்றன. இந்த உண்மையை சிறுபான்மை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அதன்பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன்அர்ச்சுனன், வி.சி.ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், ஓ.கே.சின்னராஜ், சூலூர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மற்றும் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் அமுல்கந்தசாமி, முன்னாள் மண்டல தலைவர் ஆதிநாராயணன், விஷ்ணுபிரபு, ராஜ்குமார், சிங்கைபாலன், டியூகாஸ் சுப்பையன், விமல்சோமு, வெள்ளலூர் பாலகிருஷ்ணன் உள்பட ஏராளமானவர்கள் வரவேற்றனர்.

Next Story