மடத்துக்குளத்தில் பரிதாபம் பணி ஒதுக்குவதில் தகராறு: மின்வாரிய அதிகாரி அடித்துக்கொலை ஊழியர் கைது


மடத்துக்குளத்தில் பரிதாபம் பணி ஒதுக்குவதில் தகராறு: மின்வாரிய அதிகாரி அடித்துக்கொலை ஊழியர் கைது
x
தினத்தந்தி 4 March 2020 3:00 AM IST (Updated: 4 March 2020 12:22 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே பணி ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில் மின்வாரிய அதிகாரி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஊழியரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மடத்துக்குளம், 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிழுவங்காட்டூரில் மின்சார வாரிய துணை மின் நிலைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தவர் மணிபிரபு (வயது 34). இவருடைய மனைவி சுபாஷினி (30). இவர்களுடைய மகள்கள் மது வர்னிதா (7), தபு வைஷ்ணவி (4). மணிபிரபு தனது குடும்பத்துடன் உடுமலை அருகே எஸ்.வி.புரத்தில் வசித்து வந்தார்.

இவர்தான், மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கு பணி ஒதுக்கி வந்தார். இதற்கிடையில் பணி ஒதுக்குவது தொடர்பாக அங்கு பணியாற்றி வரும் வயர்மேன் கண்ணன் (48) என்பவருக்கும், மணி பிரபுவுக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மணிபிரபு வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அலுவலத்தில் ஊழியர் கண்ணன் என்பவரும் பணிக்கு வந்து இருந்தார். அப்போது பணி ஒதுக்குவது தொடர்பாக மணிபிரபுவுக்கும், கண்ணனுக்கும் இடையே அலுவலகத்திற்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பாக மாறியதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன், அருகில் கிடந்த கட்டையை எடுத்து மணிபிரபுவை தாக்கினார். இந்த தாக்குதலில் மணிபிரபு தலையின் பின் பகுதியில்பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மணிபிரபுவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, மணிபிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மின்வாரிய ஊழியர் கண்ணனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், என்ஜினீயர் மணிபிரபுக்கும், கண்ணனுக்கும் இடையே பணி ஒதுக்குவது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. அவ்வப்போது இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இருவருக்கும் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கண்ணன், மரக்கட்டையால் மணிபிரபுவை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story