திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் ரூ.67 கோடியில் புதிய பாலம்


திருச்சி-தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் ரூ.67 கோடியில் புதிய பாலம்
x
தினத்தந்தி 3 March 2020 11:30 PM GMT (Updated: 3 March 2020 7:08 PM GMT)

திருச்சி- தஞ்சை மாவட்டங்களை இணைக்கும் வகையில் கல்லணை கொள்ளிடம் ஆற்றில் ரூ.67 கோடியில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலப்பணிகள் 90 சதவீதம் முடிந்த நிலையில் மீதி உள்ள பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்துக்கு திறந்து விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு செல்ல கல்லணையின் கிழக்கு பகுதியில் இறங்கி நடந்து பாலத்தை கடந்து கல்லணையின் மேற்கு பகுதிக்கு சென்று அங்கிருந்து பஸ் மூலம் திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

எனவே கல்லணை கொள்ளிடம் ஆற்றில் தஞ்சை- திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில் கனரக வாகனங்கள் செல்ல புதிய பாலம் கட்ட வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா கல்லணையில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்ட அனுமதி வழங்கினார்.

ரூ.67 கோடியில்...

இதன்படி ரூ.67 கோடியில் பாலம் கட்டும் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. 1,052 மீட்டர் நீளத்தில் திருச்சி மாவட்டம் கிளிக்கூடு பகுதியில் இருந்து தஞ்சை மாவட்டம் கல்லணை வரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி வேகமாக நடைபெற்றது. இந்த பாலத்தில் 25 பிரமாண்ட தூண்கள் அமைக்கப்பட்டன. தூண்களுக்கு இடையில் வைப்பதற்கான உத்தரங்கள் புதிய தொழில் நுட்பத்தில் அதிர்வுகளை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டன. இந்த பாலத்தின் அகலம் 11 மீட்டர் ஆகும்.

கடந்த 2018-ம் ஆண்டு தூண்களின் மேல் உத்தரங்களை வைக்க தொடங்கியபோது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாலப்பணிகள் நிறுத்தப்பட்டன. மேலும் உத்தரங்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன. இதனால் சேதமடைந்த உத்தரங்களுக்கு பதிலாக புதிய உத்தரங்கள் அமைக்கப்பட்டன.

விரைவில் திறக்க கோரிக்கை

இந்த பாலப்பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டு பாலத்தின் மேற்பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மற்றும்

கைப்பிடி சுவர் அமைக்கும் பணிகள்நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பாலத்தில் இருந்து திருச்சி மாவட்டத்தை இணைக்கும் பகுதியில் உள்ள கிளிக்கூடு கிராமத்தில் 75 மீட்டர் தொலைவுக்கு சாய்தளம் அமைக்க நில எடுப்பு பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் அந்த பகுதி வரை பாலப்பணிகள் நடைபெற்று அதன்பின்னர் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது.

இந்த புதிய பாலம் திறக்கப்பட்டால் பூம்புகாரில் இருந்து ஸ்ரீரங்கம் வரை நேரடியாக கனரக பஸ் போக்கு வரத்து வசதி செய்ய முடியும். மேலும் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு மிக எளிதில் சென்று வர இயலும். எனவே பணிகளை விரைந்து முடித்து பாலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story