பேராவூரணியில் புதிய பஸ் நிலையத்தில் நடைபெறும் விரிவாக்க பணியால் இடநெருக்கடியில் தவிக்கும் தரைக்கடை வியாபாரிகள்


பேராவூரணியில் புதிய பஸ் நிலையத்தில் நடைபெறும் விரிவாக்க பணியால் இடநெருக்கடியில் தவிக்கும் தரைக்கடை வியாபாரிகள்
x
தினத்தந்தி 4 March 2020 4:30 AM IST (Updated: 4 March 2020 12:52 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி புதிய பஸ் நிலையத்தில் நடைபெறும் விரிவாக்க பணியால் இட நெருக்கடியில் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மாற்று இடம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் புதிய பஸ் நிலையம் - நீலகண்ட பிள்ளையார் கோவில் ஆகியவற்றுக்கு இடையே வாரச்சந்தை இயங்கி வருகிறது. இந்த வாரச்சந்தையில் போதிய இடவசதி இல்லை என்பதால் அதன் அருகில் உள்ள புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள காலியான இடங்களில் சிறு வியாபாரிகள் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பேராவூரணி பேரூராட்சி சார்பில் பஸ் நிலைய வளாகத்தில் சுமார் ரூ.90 லட்சத்தில் 5 கடை மற்றும் உணவகம் கட்டும் பணி கடந்த வாரம் தொடங்கியது. இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் வியாபாரிகள் கடை வைத்திருந்த பகுதிகளில் பில்லர் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தைக்கு வந்த வியாபாரிகள் தாங்கள் கடை வைத்திருந்த பகுதியில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் கடைகள் அமைக்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டனர்.

மாற்று இடம்

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் பேராவூரணி வாரச்சந்தைக்கு நாங்கள் காய்கனிகளை மொத்த விற்பனை கடையில் இருந்து வாங்கி மினி வேனில் ஏற்றி வந்து விற்பனை செய்வோம். நாங்கள் தரைக்கடை அமைத்து காய்கனி விற்பனை செய்த இடத்தில் பில்லர்குழிகள் தோண்டப்பட்டு விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் நாங்கள் கொண்டு வந்த பொருட்களை எங்கு வைத்து விற்பனை செய்வது என தெரியவில்லை. சில வியாபாரிகள் முன்கூட்டியே பஸ் நிலைய பகுதியில் இடம் பிடித்து இட நெருக்கடிக்கு மத்தியில் வியாபாரம் செய்தனர்.

இதனால் பல வியாபாரிகள் அருகே உள்ள பேராவூரணி - பட்டுக்கோட்டை முதன்மை சாலையில் தரைக் கடை அமைத்து வியாபாரம் செய்தனர். இந்த பகுதியில் எங்களால் முழுமையாக பொருட்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் எங்களின் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தரைக்கடை வியாபாரிகள் நலன் கருதி பேராவூரணி வாரச்சந்தைக்கு மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story