உத்தமபாளையம் அருகே, தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை


உத்தமபாளையம் அருகே, தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2020 4:00 AM IST (Updated: 4 March 2020 1:36 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே தாய்-மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் ஒரு மதுபாரில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அனுசுயாதேவி (வயது 33). இவர்களுக்கு ‌ஷாருதர்சனா (14) என்ற மகளும், நிகில் (12) என்ற மகனும் உள்ளனர். இதில் ‌ஷாருதர்சனா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும், நிகில் 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக லட்சுமணன் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கணவர் வேலைக்கு போகாமல் இருப்பதை அனுசுயாதேவி, தனது பெற்றோரிடம் கூறினார். மேலும் கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால், கடந்த 20 நாட்களுக்கு முன்பு அனுசுயாதேவி தனது மகன், மகளுடன் கூடலூரில் இருந்து ராயப்பன்பட்டி வின்சென்ட் பவுல் தெருவில் குடியேறினார். லட்சுமணன் மட்டும் கூடலூரில் வசித்து வந்தார்.

இதற்கிடையே தனது 2 குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அனுசுயாதேவி ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் அலுவலக உதவியாளர் வேலையில் சேர்ந்தார். நேற்று முன்தினம் வீட்டில் அனுசுயாதேவி தனது மகள் ‌ஷாருதர்சனா பிறந்த நாளை கொண்டாடினார். லட்சுமணனும் அங்கு வந்தார்.

அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் லட்சுமணன், தனது மகன் நிகிலை மட்டும் அழைத்து கொண்டு கூடலூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை, வெகுநேரமாகியும் அனுசுயாதேவி வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாயன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் அனுசுயாதேவியும், மற்றொரு அறையில் மின்விசிறியில் அவருடைய மகள் ‌ஷாருதர்சனாவும் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினர்.

இதையடுத்து அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அனுசுயாதேவியும், அவருடைய மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்சினை காரணமா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகளும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story