மதுரை அருகே, மனைவியின் கள்ளத்தொடர்பால் விருதுநகர் வங்கி ஊழியர் படுகொலை - கள்ளக்காதலன் வெறிச்செயல்
மதுரை அருகே விருதுநகரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஒருவர் அவரது மனைவியின் கள்ளக்காதலனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மேலரத வீதி மாரிமுத்து சந்தைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் மணிகண்டன் (வயது 26). இவர் தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்றுத் தரும் முகவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், மதுரை கப்பலூர் காந்தி நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது மகள் ஜோதிலட்சுமிக்கும் (21) கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்ைத உள்ளது.
மணிகண்டனுக்கும், அவரது மனைவி ஜோதிலட்சுமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமியின் தந்தை சிவக்குமார் சாலை விபத்தில் சிக்கி கப்பலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் ஜோதிலட்சுமி தனது தந்தையை கவனித்துக் கொள்வதற்காக கப்பலூர் சென்றார். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை மணிகண்டன் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது 2 பேர் வந்து உங்களது மாமனார் வீட்டில் சமரசம் பேசுவதற்காக உங்களை அழைத்து வரச் சொன்னார்கள் என்று கூறினர்.
இதனை நம்பிய மணிகண்டன் இது பற்றி தனது பெற்றோரிடமும் தெரிவித்து விட்டு அவர்களுடன் சென்றார். ஆனால் மாலை வரை தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் மணிகண்டனின் பெற்றோர் அவரை ெதாடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது பற்றி மணிகண்டனின் சகோதரி அபிராமி விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மணிகண்டனின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜோதிலட்சுமியின் தாய் சித்ராதேவி, மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கப்பலூருக்கு விரைந்தனர். இது பற்றி ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மணிகண்டன் காந்திநகரில் ஜோதிலட்சுமியின் வீட்டு அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
போலீசார் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது தந்தையை கவனிப்பதற்காக கப்பலூர் வந்த ஜோதிலட்சுமிக்கு அவரது உறவினரான செல்வலட்சுமி நகரைச் சேர்ந்த கார்த்திக் (24) என்பவர் உதவிகள் செய்துள்ளார். தொடக்கத்தில் நட்புடன் பழகி வந்த அவர்களுக்கு இடையே நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கார்த்திக் அடிக்கடி ஜோதிலட்சுமியின் வீட்டுக்கு செல்வதும், அவருடன் வெளியே செல்வதுமான வழக்கத்தை மேற்கொண்டார். இதற்கிடையே ஜோதிலட்சுமி விருதுநகரில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு திரும்பினார்.
ஜோதிலட்சுமி கணவர் வீட்டுக்கு வந்த பின்பும், கார்த்திக்குடனான தொடர்பு நீடித்தது. அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். மணிகண்டனுக்கு ேஜாதிலட்சுமியின் கள்ளக்காதல் விவகாரம் தெரிந்த உடனேயே அவர் ஜோதி லட்சுமியை கண்டித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜோதிலட்சுமி கணவருடன் தகராறு செய்து விட்டு தனது குழந்தையுடன் கப்பலூரில் உள்ள தாய் வீட்டுக்கு திரும்பி விட்டார்.
இதனை அறிந்த கார்த்திக் ஜோதிலட்சுமியின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடம் ஜோதிலட்சுமியை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் திருமணமாகி குழந்தையுடன் உள்ள ஜோதிலட்சுமியை மீண்டும் அவளது கணவர் வீட்டுக்கு சமரசம் பேசி அனுப்பி வைத்து விடுவோம் என்று தெரிவித்ததுடன், ஜோதிலட்சுமியை திருமணம் செய்து வைக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் ஜோதிலட்சுமியின் வீட்டில் இருந்தபொருட்களை சேதப்படுத்திவிட்டு வெளியேறினார்.
அதன்பின்னர்தான் நேற்று முன் தினம் காலை கார்த்திக்கும், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அவரது நண்பர் ஒருவரும் விருதுநகரில் உள்ள மணிகண்டனை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மணிகண்டனை கப்பலூர் காந்திநகரில் உள்ள தனியார் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
மணிகண்டனின் உடலில் கழுத்து உள்பட 7 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன.கொலை செய்த பின்பு கார்த்திக் ஜோதிலட்சுமியின் தாயார் சித்ராதேவியை கப்பலூரில் உள்ள ஒரு கோவில் அருகே சந்தித்து உங்களது மருமகனை கொலைசெய்து விட்டேன், எனவே இப்போதாவது உனது மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என கேட்டுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்ராதேவி தனது வீட்டுக்கு வந்து மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலீசார் இச்சம்பவம் குறித்து ஜோதிலட்சுமியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்கொலை சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிலட்சுமியின் கள்ளக்காதலன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் இக்கொலை சம்பவத்துக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மணிகண்டனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இச்சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
Related Tags :
Next Story