மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா; அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி


மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா; அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி
x
தினத்தந்தி 3 March 2020 10:00 PM GMT (Updated: 3 March 2020 9:37 PM GMT)

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழா 3-வது நாளில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசி கொடை விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 3-ம்நாள் விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உ‌‌ஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலின் 4 வீதிகளிலும் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.

மதியம் 1 மணிக்கு உச்சபூஜை, மாலை 6.15 மணிக்கு கீழ்கரை பிடாகை சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் பவனி, 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு கதகளி, 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல் ஆகியவை நடந்தது.

விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 6.15 மணியளவில் கொத்தனார்விளை விடாலமுத்து சிவன் கோவிலில் இருந்து யானை மீது களப பவனி புறப்பட்டு மண்டைக்காடு கோவில் வந்தடைகிறது. மாசி கொடையின் முக்கிய நிகழ்ச்சியான வலியபடுக்கை பூஜை 6-ந்தேதி நள்ளிரவு நடக்கிறது. 9-ந் தேதி இரவு பெரிய சக்கர தீவெட்டி பவனி நடக்கிறது. 10-ந்தேதி நள்ளிரவு ஒடுக்கு பூஜையுடன் கொடை நிறைவடைகிறது.

Next Story