மாசி படையல் விழாவையொட்டி, மதுராபுரி உச்சி கருப்பன் கோவிலில் மஞ்சுவிரட்டு


மாசி படையல் விழாவையொட்டி, மதுராபுரி உச்சி கருப்பன் கோவிலில் மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 4 March 2020 3:30 AM IST (Updated: 4 March 2020 3:46 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைப்பட்டி மதுராபுரியில் உள்ள உச்சி கருப்பன் கோவிலில் மாசி படையல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி வேங்கைப்பட்டி மதுராபுரியில் உள்ள தொட்டியகாத்தன்வயல் பகுதியில் உச்சிகருப்பன் சாமிக்கு ஆண்டுதோறும் மாசி மாதம் படையல் போட்டு சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த சில வருடங்களாக மழை பொய்த்துப்போன நிலையில் விவசாயம் செழிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதியில் பெய்த மழையால் விவசாயம் செழித்து வயல்வெளிகளில் நெல் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு சாமிக்கு படையல் போடப்பட்டது. முன்னதாக உச்சி கருப்பன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு கிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.

அதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக தொழுவத்தில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சிங்கம்புணரி மற்றும் சுற்றி உள்ள பிரான்மலை, பொன்னமராவதி, நத்தம், கொட்டாம்பட்டி, மேலூர், திருப்பத்தூர் போன்ற பகுதியை சேர்ந்த சுமார் 200 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் மஞ்சுவிரட்டு காளைகளை மல்லுக்கட்டி அடக்கினர். சில காளைகள் பிடிபடவில்லை. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை மதுராபுரி மங்கான் கூட்டம் பங்காளிகள் செய்திருந்தனர்.

Next Story