சமூக வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவிட்ட வாலிபர் கைது
ஊத்துக்குளியில் சமூகவலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவிட்ட வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்குளி,
குழந்தைகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர்களையும், பதிவிறக்கம் செய்பவர்களையும் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அதாவது எந்தெந்த சமூக வலைத்தளத்தில் இருந்து குழந்தைகளின் ஆபாச வீடியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது, பதிவிறக்கம் செய்யப்படுகிறது என்பதை சைபர் கிரைம் போலீசாரால் கண்டு பிடிக்க முடியும்.
அதன்படி திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் உள்ள செல்போன் டவருக்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் ஆபாசவீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதாக சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அந்த செல்போன் எண்ணை பயன்படுத்தும் ஆசாமியை கைது செய்யுமாறு ஊத்துக்குளி போலீசாருக்கு சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டனர்.
இதையடுத்து ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் மற்றும் போலீசார் அந்த குறிப்பிட்ட செல்போன் எண்ணை பயன்படுத்தும் ஆசாமி யார் என்று விசாரித்தனர். விசாரணையில் அந்த குறிப்பிட்ட எண்ணை பயன்படுத்திய ஆசாமி ஜிதேந்திரா குமார் ஷா (வயது 28) என்றும், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அந்த ஆசாமி, ஊத்துக்குளி அருகே உள்ள டிக்ஸி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜிதேந்திரகுமார் ஷாவை போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் பயன்படுத்திய செல்போனை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த செல்போனில் எண்ணற்ற ஆபாச வீடியோக்களை பதவிறக்கம் செய்து வைத்து இருப்பது தெரியவந்தது.இவர் இரவு நேரங்களில் தனது செல்போனில் வலைத்தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது தெரியவந்தது.
Related Tags :
Next Story