சேவூர் அருகே குடிநீர் குழாய் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்


சேவூர் அருகே குடிநீர் குழாய் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 March 2020 5:00 AM IST (Updated: 4 March 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

சேவூர் அருகே தத்தனூர் ஊராட்சிக்கு பிரதான குடிநீர் குழாயில் இருந்து பொதுக்குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேவூர், 

அவினாசி ஒன்றியத்தில் வடக்கு பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறுமுகை வேடர் காலனி பகுதியிலிருந்து அவினாசி - அன்னூர் 240 கிராமங்களுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பவானி ஆற்று குடிநீர் வருகிறது. இந்த குடிநீர் சேவூர் அருகே உள்ள சிந்தாமணி பாளையத்தில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய தரைமட்ட தொட்டிக்கு வருகிறது. அங்கிருந்து பாப்பாங்குளம், போத்தம்பாளையம், புலிப்பார், தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், அய்யம்பாளையம், வடுகபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு பிரதான குழாய் மூலம் ஆற்றுக்குடிநீர் செல்கிறது.

தத்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூட்டப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆற்றுக்குடிநீருக்காக அருகில் உள்ள போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் கூட்டப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அவ்வழியாக புலிப்பார் ஊராட்சி குடோன் காலனி பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயில் இருந்து பொதுக்குழாய் அமைக்க முடிவு செய்தனர்.

இதையறிந்த புலிப்பார் ஊராட்சி குடோன் காலனி பொதுமக்கள் அவினாசி -கோபி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு (குடோன் காலனிக்கு) வினியோகப்படும் பிரதானக் குழாயில் இருந்து பொதுக்குழாய் அமைத்தால், எங்கள் பகுதிக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, அவர்களின் ஊராட்சிக்கு வரும் இணைப்பில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும். அல்லது புதிய குழாய் மூலம் பொதுக்குழாய் அமைக்க வேண்டும் என்றனர்.

இது பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், குடிநீர் வடிகால் வாரியத்தினர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தத்தனூர் ஊராட்சி கூட்டப்பள்ளி பகுதியில் தற்போதைக்கு புலிப்பார் ஊராட்சி குடோன் காலனிக்கு செல்லும் பிரதான குழாயிலிருந்து பொதுக்குழாய் அமைத்து குடிநீர் வழங்கப்படும். குடோன் காலனி பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், பொதுக்குழாய் துண்டிக்கப்பட்டு, புதிதாக குழாய் அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தினால், அவினாசி -கோபி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story