கடந்த ஆண்டில் புற்றுநோய்க்கு 5,727 பேர் சாவு; சுகாதார மந்திரி அதிர்ச்சி தகவல்
மராட்டியத்தில் கடந்த ஆண்டில் புற்றுநோய்க்கு 5,727 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
மும்பை,
மராட்டிய மேல்-சபையில் நேற்று பாரதீய ஜனதா உறுப்பினர் நிரஞ்சன் தேவ்கரே எழுப்பிய ஒரு கேள்விக்கு மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மராட்டியத்தில் கடந்த ஆண்டில் 11 ஆயிரத்து 306 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவர்களில் 5 ஆயிரத்து 727 பேர் இறந்து விட்டதாகவும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
மாநிலத்தில் உள்ள 36 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஹீமோதெரபி சிகிச்சை முறை ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது.
மற்ற மாவட்டங்களில் மாநில அரசின் மகாத்மா ஜோதிபா புலே ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மாநில மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் எண்ணிக்கை குறைவு. 16 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரி யும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மும்பையில் உள்ள டாடா நினைவு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சைக்கான பயிற்சி பெற்று உள்ளனர்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story