புதுவையில் நடைபயிற்சி சென்ற போது அமைச்சரிடம் செல்போன் பறிப்பு


புதுவையில் நடைபயிற்சி சென்ற போது அமைச்சரிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 3 March 2020 11:40 PM GMT (Updated: 3 March 2020 11:40 PM GMT)

புதுவையில் நடைபயிற்சிக்கு சென்று விட்டு வந்த அமைச்சர் கமலக்கண்ணனிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் செல்போனை பறித்துச் சென்றனர்.

புதுச்சேரி,

புதுவை ஒயிட் டவுண் பகுதியில் வழிப்பறி என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. சுற்றுலா வரும் வெளியூர் பயணிகள் இந்த பகுதியில் நடந்து சென்று பிரெஞ்சு கட்டிடக்கலை அழகை ரசிப்பது வழக்கம்.

இவர்களை குறிவைத்து சிலர் பின்தொடர்ந்து சென்று செல்போன், கைப்பை ஆகியவற்றை பறித்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

அமைச்சரிடம் கைவரிசை

சுற்றுலா வருபவர்கள் ஓரிரண்டு நாட்களே இருப்பதால் பணம், செல்போன் பறித்துச் செல்லப்படுவது குறித்து காவல்நிலையத்தில் வாய்மொழியாக புகார் கூறிவிட்டு சென்று விடுகின்றனர். அதன்பிறகு தொடர் நடவடிக்கை இல்லாமல் போவதால் வழிப்பறிக் கும்பலுக்கு சாதகமான நிலை ஏற்படுகிறது.

எனவே ஒயிட் டவுண் பகுதியில் வழிப்பறி என்பது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் புதுச்சேரி அமைச்சரிடமே துணிகரமாக கைவரிசை காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடைபயிற்சி

அதாவது, புதுவை வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் கமலக்கண்ணன். காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இவர் புதுவை வந்தால் சுப்பையா சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறை பங்களாவில் தங்குவார். அதன்படி நேற்று முன்தினம் இங்கு தங்கி இருந்தார். அன்றையதினம் இரவு புதுவை கடற்கரை சாலையில் கமலக்கண்ணன் நடைபயிற்சி மேற்கொண்டார்.

செல்போன் பறிப்பு

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு நடந்தே வந்துகொண்டிருந்தார். தீயணைப்பு நிலையம் அருகே அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் வந்தனர். எதிர்பாராத வகையில் திடீரென அமைச்சர் கமலக் கண்ணன் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு மாயமாகிவிட்டனர்.

இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

கண்காணிப்பு கேமரா

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Next Story