சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய பட்னாவிசின் மனு தள்ளுபடி


சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய பட்னாவிசின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 4 March 2020 12:16 AM GMT (Updated: 4 March 2020 12:16 AM GMT)

வேட்பு மனுவில் கிரிமினல் வழக்குகளை மறைத்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய தேவேந்திர பட்னாவிசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மும்பை, 

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன் மீது 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு கிரிமினல் வழக்கு விவரங்களை மறைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி நாக்பூரை சேர்ந்த வக்கீல் சதிஷ் உகே என்பவர் நாக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும், அடுத்து மும்பை ஐகோர்ட்டும் நிராகரித்தது.

இதை எதிர்த்து வக்கீல் சதிஷ் உகே சுப்ரீம் கோர்ட்டை அணுகினார். அவரது மனு மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு கூறிய சுப்ரீம் கோர்ட்டு, மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ததுடன், கிரிமினல் வழக்குகளை மறைத்த வழக்கில் கீழ்கோர்ட்டில் பட்னாவிஸ் விசாரணையை சந்திக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் பட்னாவிசுக்கு எதிரான வழக்கை மீண்டும் நாக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரி பட்னாவிஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெளிவான பிழை இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய கோரிய பட்னாவிசின் மனுவை நீதிபதிகள் அதிரடியாக தள்ளுபடி செய்தனர்.

மறுஆய்வு மனுக்களை விசாரிப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, தேவேந்திர பட்னாவிசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Next Story