கட்டப்பஞ்சாயத்து செய்வதில் போலீஸ் அதிகாரிகளுடன் தாதாக்கள் கூட்டு சட்டமன்ற மதிப்பீட்டு குழு புகார்


கட்டப்பஞ்சாயத்து செய்வதில் போலீஸ் அதிகாரிகளுடன் தாதாக்கள் கூட்டு சட்டமன்ற மதிப்பீட்டு குழு புகார்
x
தினத்தந்தி 4 March 2020 12:27 AM GMT (Updated: 4 March 2020 12:27 AM GMT)

போலீஸ் அதிகாரிகளுடன் தாதாக்கள் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்வதாக சட்டமன்ற மதிப்பீட்டு குழு புகார் தெரிவித்தது.

புதுச்சேரி,

புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், பாஸ்கர், டி.பி.ஆர்.செல்வம், கீதா ஆனந்தன், வெங்கடேசன், டி.பி.ஆர்.செல்வம், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, உள்துறை சிறப்பு செயலாளர் சுந்தரசேன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால், சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தொடர் கொலைகள்

சமீப காலமாக புதுச்சேரியில் நடைபெற்று வரும் தொடர் கொலைகளால் மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய காவல்துறையினர் அவ்வாறு செய்யாததால் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் தங்கு தடையின்றி துணிச்சலுடன் நடப்பதற்கு வாய்ப்பாக உள்ளது.

குறிப்பாக நீதித்துறை, காவல்துறை, சிறை நிர்வாகம் ஆகிய 3-ம் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக இல்லாமல் முரண்பாடாக இருப்பதும் தொடர் குற்றத்துக்கு ஒரு காரணமாக உள்ளது. காவலர்கள் மிகுந்த பணிச்சுமை, மனச்சோர்வுடன் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கேண்டீன், மலிவு விலையில் உணவு பொருட்கள் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசு

ஏதோ ஒரு நேரத்தில் காவல்துறையில் பொருள் வாங்கியதில் முறைகேடு நடந்தது என்பதற்காக காவலர்களுக்கு சீருடைகூட வழங்காமல் அதற்குரிய பணத்தை வழங்குவது ஏற்புடையது அல்ல. இதனால் உயர் அதிகாரிகள் அணியக்கூடிய காக்கி கலரை சாதாரண காவலர்களும், சாதாரண காவலர்கள் அணியவேண்டிய காக்கி கலர் சீருடையை இன்ஸ்பெக்டர்களும் அணிந்து வருகின்றனர். எனவே அவரவர் தகுதிக்கேற்ப சீருடையை துறையே வழங்கவேண்டும்.

மோட்டார் சைக்கிள் திருட்டு, செயின்பறிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய எம்.எல்.ஏ.க்களின் சிபாரிசு தேவைப்படுகிறது. பல காவல்நிலையங்களில் அரசியல் போர்வையில் உள்ள உள்ளூர் தாதாக்கள், ஒரு சில வக்கீல்கள், காவல்துறை அதிகாரிகள் என கூட்டு சேர்ந்துகொண்டு பஞ்சாயத்து செய்கின்றனர். இது தடுக்கப்பட வேண்டும். போதைப்பொருட்கள் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. சைபர் கிரைம் குற்றங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலையே சைபர் கிரைம் போலீசாருக்கு உள்ளது. அதேபோல் கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசாருக்கும் வழக்குப்பதிவு செய்ய அதிகாரமில்லை.

ஜாமர் கருவி

பெண்கள் பங்கேற்கும் போராட்டங்கள் தற்போது அதிகரிப்பதால் ஐ.ஆர்.பி.யில் பெண்கள் பிரிவினை உருவாக்கவேண்டும். சிறையில் அதிநவீன ஜாமர் கருவி பொருத்த வேண்டும். விமான நிலையங்களில் பாதுகாப்பு பிரிவு மத்திய அரசின் கீழ் உள்ளதைப்போல் புதுச்சேரி சிறை பாதுகாப்பினையும் மத்திய அரசின் கீழ் கொண்டுசெல்ல வேண்டும். நீண்ட காலமாக சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைப்புகள் என்ற பெயரில் பலர் காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது போன்றவை சகஜமாக நடக்கிறது. இதுபோன்ற அமைப்புகளை காவல்துறை கண்காணிக்கவேண்டும். கலவரத்தை தூண்டுவதுபோல் சாதி, மத, ரீதியிலான நோட்டீசுகளை ஒட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். சாலை ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவலன் செயலி

தமிழகத்தைப்போல் புதுவையிலும் காவலன் செயலியை உருவாக்கி நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். விடுதிகளில் தங்கியிருக்கும் பெண்கள் பாதுகாப்புடன் உள்ளனரா? என்பதை கண்காணித்து உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. பேசினார்.

Next Story