வடமதுரை அருகே, வேன் டிரைவரை கரம் பிடித்த கல்லூரி மாணவி - மற்றொரு ஜோடியும் போலீசில் தஞ்சம்
வடமதுரை அருகே வேன் டிரைவரை காதலித்து திருமணம் செய்த கல்லூரி மாணவியும், மற்றொரு ஜோடியும் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.
வடமதுரை,
வடமதுரை அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 21). இவர், பால் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். வடமதுரை போஜனம்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி (19). இவர், வேடசந்தூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும், கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடியினர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கருதி, வடமதுரை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் திருமணத்தை ஏற்று கொள்ளவில்லை. இதனையடுத்து மணமக்கள் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழ போலீசார் அனுப்பி வைத்தனர்.
வேடசந்தூர் அருகே உள்ள ஒத்தபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (23). இவர், தனியார் மில்லில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதேமில்லில் தவசிமடையை சேர்ந்த மரியதினா (22) என்பவரும் வேலை செய்தார். மில் வேனில் தினமும் பயணம் செய்ததால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
இவர்களின் காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதல்ஜோடியினர், வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, மணமக்களை அவர்களது விருப்பப்படி வாழ அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story