கடமலை-மயிலையில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் கலெக்டரிடம், தி.மு.க.வினர் மனு


கடமலை-மயிலையில்   ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்   கலெக்டரிடம், தி.மு.க.வினர் மனு
x
தினத்தந்தி 4 March 2020 10:45 PM GMT (Updated: 4 March 2020 3:50 PM GMT)

கடமலை-மயிலையில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டரிடம், தி.மு.க.வினர் மனு அளித்தனர்.

தேனி, 

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஆண்டிப்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமையில் கடமலை-மயிலை ஒன்றிய கவுன்சிலரும், தி.மு.க. சார்பில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான சித்ரா மற்றும் நிர்வாகிகள் சிலர் நேற்று வந்தனர். அப்போது அவர்கள், கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கலெக்டர் பல்லவி பல்தேவிடம் வலியுறுத்தினர். பின்னர், கலெக்டரிடம், கவுன்சிலர் சித்ரா ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் நான் போட்டியிட்டேன். பதிவான 14 வாக்குகளில் எனக்கு 6 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளருக்கு 6 வாக்குகளும் செல்லுபடியான வாக்குகள் பதிவாகி இருந்தன. 2 வாக்குகள் செல்லாத வாக்குகளாக இருந்தன. ஆனால், தேர்தல் அதிகாரிகள் அதில் ஒரு வாக்கு மட்டும் செல்லுபடியாகும் என்று கூறி, அ.தி.மு.க. வேட்பாளர் 7 வாக்குகள் பெற்றதாக கூறி அவரை ஒன்றியக்குழு தலைவராக அறிவித்துவிட்டார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தேன். அவர் வாங்க மறுத்துவிட்டார். எனவே, இந்த தேர்தல் முடிவை ரத்து செய்து மீண்டும் முறையாக வாக்குப்பதிவு நடத்த வேண்டும். மேலும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story