மாவட்ட செய்திகள்

திருப்பூரில் வீடு புகுந்து துணிகரம்: தொழிலதிபர் மனைவியை மிரட்டி 10¾ பவுன் நகை பறிப்பு - ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி கைவரிசை + "||" + Real Estate House in Tiruppur: Intimidate businessman's wife 10¾ Flush Jewelry

திருப்பூரில் வீடு புகுந்து துணிகரம்: தொழிலதிபர் மனைவியை மிரட்டி 10¾ பவுன் நகை பறிப்பு - ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி கைவரிசை

திருப்பூரில் வீடு புகுந்து துணிகரம்: தொழிலதிபர் மனைவியை மிரட்டி 10¾ பவுன் நகை பறிப்பு - ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி கைவரிசை
திருப்பூரில் வீடு புகுந்து தொழிலதிபரின் மனைவியை அரிவாளால் மிரட்டி 10¾ பவுன்நகையை,ஹெல்மெட் அணிந்து வந்த வடமாநில ஆசாமி பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்,

திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி ஐலேண்ட் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் எபினேசர். இவர், அந்த பகுதியில் சொந்தமாக பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பூங்கொடி (வயது 32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பனியன் நிறுவனத்திற்கு எபினேசர் சென்று விட்டார். இவருடைய 2 மகன்களும் வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் தூங்கினர். பூங்கொடி மட்டும் வீட்டின் பிரதான கேட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, வீட்டின் வராண்டாவில் அமர்ந்து இருந்தார்.

அப்போது திடீரென்று ஹெல்மெட் அணிந்தபடி கையில் அரிவாளுடன் 30 வயது மதிக்க தக்க ஒரு ஆசாமி அங்கு வந்தார். அந்த ஆசாமியை பார்த்து திடுக்கிட்ட பூங்கொடி கூச்சல்போட முயன்றார். அதற்குள் அந்த ஆசாமி “கூச்சல் போட்டால் வெட்டி விடுவேன்” என்று பூங்கொடியை மிரட்டியவாறு நகையை கழற்றி கொடுக்கும்படி தமிழ்கலந்த இந்திமொழியில் கூறியுள்ளான். இதனால் பயந்துபோன பூங்கொடி தான் அணிந்து இருந்த 6 பவுன் தாலிக்கொடி, 3 பவுன் எடை கொண்ட 2 வளையல்கள் மற்றும் 1¾ பவுன் எடை கொண்ட மற்றொரு சங்கிலி ஆகியவற்றை கழற்றி கொடுத்தார்.

பின்னர் வீட்டின் பீரோவில் பணம் உள்ளதா? என்று கேட்டு உள்ளார். அப்போது வீட்டின் பீரோவில் பணம் இல்லை என்று பூங்கொடி கூறியதும், நான் இங்கிருந்து செல்லும் வரை கூச்சல் போடக்கூடாது என்று மிரட்டிவிட்டு நகையுடன், காம்பவுண்டு சுவர் ஏறிக்குதித்து தப்பி சென்றார்.

அதன்பின்னர் நடந்த விவரத்தை தனது கணவர் எபினேசருக்கு செல்போன் மூலம் பூங்கொடி தகவல் தெரிவித்தார். உடனே அவர் 15 வேலம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவம் நடந்த வீட்டிற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்களுடைய வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளையும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது ஹெல்மெட் அணிந்த படி 30 வயது மதிக்கத் தக்க வடமாநில சாயலை கொண்ட ஒரு ஆசாமி ஸ்கூட்டரில் எபினேசர் வீட்டு முன்பு 3 முறை அங்கும், இங்கும் செல்வதும், பின்னர் எபினேசர் வீட்டின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, அவருடைய காம்பவுண்டு சுவர் மீது அரிவாளை வைப்பதும், பின்னர் அரிவாளுடன் உள்ளே செல்வதும் பதிவாகி உள்ளது. பின்னர் அதே ஆசாமி, காம்பவுண்டு சுவரை ஏறிக்குறித்து வெளியே வந்து, ஸ்கூட்டரில் ஏறி தப்பி செல்வதும் பதிவாகி உள்ளது. அந்த பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால், ஸ்கூட்டரின் பதிவு எண் தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.