குன்னூரில், விதிமுறைகளை மீறிய 10 கட்டிடங்களுக்கு ‘சீல்' - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
குன்னூரில் விதிமுறைகளை மீறிய 10 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
குன்னூர்,
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. இந்த விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் நகராட்சியில் சமீப காலமாக விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்தது. மேலும் வீடுகளுக்கு என அனுமதி பெற்றுவிட்டு, அதனை வணிக வளாகங்களாக பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. இது தொடர்பாக குன்னூர் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் 100-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி சம்பந்தப்பட்ட கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு அவற்றை காலி செய்ய நோட்டீசு வழங்கப்பட்டது. ஆனால் யாரும் கட்டிடங்களை காலி செய்யவில்லை. இதையடுத்து நேற்று குன்னூர் நகராட்சி கமிஷனர் பாலு அறிவுரையின்பேரில் பெட்போர்டு பகுதியில் உள்ள விதிமுறைகளை மீறிய 10 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் இந்த நடவடிக்கை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story