அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பயங்கரம் - கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை


அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த பயங்கரம் - கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை
x
தினத்தந்தி 5 March 2020 3:45 AM IST (Updated: 5 March 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே மங்கம்மாபேட்டை காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவர் ரெயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு லட்சுமி (59) என்கிற மனைவியும், இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை மங்கம்மாபேட்டை பொன்னியம்மன் நகர் மைதான பகுதிக்கு சென்றவர்கள் அங்கு முட்புதர் அருகே எரிந்த நிலையில் செல்வராஜ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு வந்து பார்த்தனர்.

அதற்குள் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றினர். செல்வராஜ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த கோணத்தை வைத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். பிரேத விசாரணைக்கு பின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது குடும்பத்தில் தகராறு ஏதும் இருந்து மனம் உடைந்த நிலையில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரும் கொலை செய்து எரித்தனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதில் உள்ள மர்மம் தெரிய வரும்.

மேலும் செல்வராஜ் பிணமாக கிடந்த இடத்தின் அருகே அவரது வங்கி பாஸ் புத்தகம் மற்றும் செல்போன் இருந்தது. செல்போனை கைப்பற்றி அதில் செல்வராஜை கடைசி நேரத்தில் தொடர்பு கொண்டவர்கள் என்ன பேசினார்கள் என்ற தகவலை போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மங்கம்மாபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story