விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க தமிழகத்தில் 60 இடங்களில் சேமிப்பு கிடங்கு


விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க தமிழகத்தில் 60 இடங்களில் சேமிப்பு கிடங்கு
x
தினத்தந்தி 5 March 2020 12:00 AM GMT (Updated: 4 March 2020 8:17 PM GMT)

விவசாயிகள் விளை பொருட்களை பாதுகாப்பாக வைக்க தமிழகத்தில் 60 இடங்களில் சேமிப்பு கிடங்கு உள்ளது என்று உதவி பொது மேலாளர் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் விலையில்லா கைத்தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி தஞ்சையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி தலைமை தாங்கினார். திருச்சி மண்டல மேலாளர் சரவணன் வரவேற்றார்.

இதில் 250 விவசாயிகளுக்கு விலையில்லா கைத்தெளிப்பான்களை வழங்கி சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் ராஜாசிங் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை சேமிக்கவும், விளைபொருட்களுக்கு இழப்பு சேதம் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட நிறுவனம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனமாகும். விவசாயிகள் தங்களின் விளைபொருட்கள் மற்றும் தானியங்களை சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு ரசீது வழங்கப்படுகிறது. இந்த ரசீதை பயன்படுத்தி விவசாயிகள் தங்களின் பொருட்களுக்கு ஈடாக வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளலாம்.

60 சேமிப்பு கிடங்கு

இந்நிறுவனம் விஞ்ஞான முறையில் தானியங்களை எவ்வாறு பாதுகாப்பாக சேமிப்பது என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கிறது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் ஆதரவு விலை மற்றும் விலை கட்டுப்பாடு திட்டங்களில் விவசாயிகள் பயன்பெற தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் உதவி செய்கிறது. தமிழ்நாட்டில் 60 இடங்களில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் செயல்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஈச்சங்கோட்டை வேளாண்மைக்கல்லூரி பேராசிரியர் ஜெகன் மோகன் மற்றும் விவசாயிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் நாஞ்சிக்கோட்டை சேமிப்பு கிடங்கு மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Next Story