தஞ்சை மாவட்டத்தில் 101 மையங்களில் 28,540 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர்


தஞ்சை மாவட்டத்தில் 101 மையங்களில் 28,540 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர்
x
தினத்தந்தி 4 March 2020 11:30 PM GMT (Updated: 4 March 2020 8:25 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 101 மையங்களில் 28 ஆயிரத்து 540 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வை எழுதினர்.

தஞ்சாவூர்,

பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் 101 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தஞ்சை கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த தேர்வை கலெக்டர் (பொறுப்பு) மணிமேகலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. 101 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 13 ஆயிரத்து 27 மாணவர்களும், 15 ஆயிரத்து 513 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 540 பேர் எழுதினர். தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்காக 5 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

2,149 பணியாளர்கள்

தேர்வு மையங்களில் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 149 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 201 பேர் எழுதினர். அவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வுஅறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தும் ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் 212 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகள்

இம்மாவட்டத்தில் தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் (இடைநிலை கல்வி) கோபிதாஸ் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்து தேர்வு பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்க்காவல் படைத்தலைவர் மற்றும் பிற துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தேர்வு மையங்களில் குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கூடுதல் பஸ் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

Next Story